எதிர்க்கட்சியினர் எத்தகைய துரோக செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் நேரிய வழியில் தொடர்ந்து பயணிக்கும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மத்திய கிழக்கு யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்களை குழப்பும் நோக்கிலேயே எதிர்க்கட்சியினர் இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது. அனைத்து நிலைமைகளையும் அரசாங்கம் மிக கவனமாக கையாண்டு வருகிறது.
கடலுக்குச் செல்லும் அனைத்து மீனவர்களுக்கும் போதுமானளவு எரிபொருளை வழங்குவதற்கு நாம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேபோன்று நாட்டில் அனைத்து விவசாயிகளுக்கும் தமது விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான போதியளவு எரிபொருள் வழங்கப்படுகிறது.அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட வரிசை யுகம் திடீரென ஏற்பட்டது அல்ல.தற்போதைய எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட மோசமான நடவடிக்கைகளே அதற்குக் காரணம். எதிர்க்கட்சியினர் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது தமது பைகளை நிரப்புவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். சுனாமியின் போது கூட கொள்ளையடித்தவர்கள் அவர்கள்.அதில் குபேரர்களாக மாறியவர்களும் உண்டு.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி எமது அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டதல்ல. இது மத்திய கிழக்கு அல்லது சர்வதேச நாடுகளின் யுத்தத்தினால் ஏற்பட்ட நெருக்கடியாகும். இதன் காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் தற்போது எரிபொருள் பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
முன்னேற்றமடைந்துள்ள ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டாலும் அந்த நாடுகளும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
வங்குரோத்து அடைந்த நாடு என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம்.
தற்போது நாடு தேசிய உற்பத்தியில் ஐந்து விதமான அதிகரிப்பைக் கொண்டுள்ளது. 3.3 வீத சேவைத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது
300 மில்லியன் டொலர் வருமானத்தை கடற்றொழில் துறை பெற்றுக் கொண்டுள்ளது என்றார்.