அரசினால் அபிவிருத்தி நடைபெறும் என பலவருடமாக காத்திருந்து எமாந்த மேன்காமம் கிராம மக்கள் தமது வீதியை தாமே செப்பனிட்டு வருகின்றனர்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேன்காமம் – மல்லிகைத்தீவு பிரதான வீதியின் சிறு பகுதியானது பல வருடகாலமாக செப்பனிடப்படாத நிலையில் குன்றும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டு வருகின்றது.
இதனை செப்பனிட்டுத் தருமாறு பல வருடகாலமாக தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த கிராம மக்கள் இறுதியாக தமது சொந்த நிதியை பயன்படுத்தி வீதியை செப்பனிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வீதியின் ஒரு கிலோமீற்றர் பகுதியானது செப்பனிடப்பட வேண்டிய நிலையில் 0.5 கிலோமீற்றர் பகுதியானது ஐ திட்டத்தின் மூலம் செப்பனிடுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டபோதும் அதுவும் இடம்பெறவில்லை.
இதனால் அவ்வீதியின் ஊடாக பயணிக்கின்ற பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அத்துடன் விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
குறித்த பிரதான வீதியானது தெகிவத்தை, மேன்காமம், பாரதிபுரம், கங்குவேலி, மல்லிகைத்தீவு உள்ளிட்ட பல கிராம மக்களை இணைக்கின்ற பிரதான வீதியாக காணப்பட்டு வருகின்றது.
மண் வீதியாக இருக்கின்ற இது தார் வீதியாக செப்பனிடப்படுமாக இருந்தால் தெகிவத்தையில் இருந்து மல்லிகைத்தீவு ஊடாக மூதூர் வரை போக்குவரத்து இடம்பெறும் இதன்மூலம் அக்கிராமங்கள் அபிவிருத்தியடையும். எனவே இவ்வீதியை செப்பனிட்டு முழுமையாக பயன்படுத்துவதற்கு உதவுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.