தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor ) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இன்று 19 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் உயர் மட்ட சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், சிறப்பு தூதர் செர்ஜியோ கோர், அரசின் சிரேஷ்ட தலைவர்களுடன் சந்தித்து அமெரிக்கா–இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தவுள்ளார். மேலும், முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
இந்த சந்திப்புகள், முக்கிய கடல் போக்குவரத்து வழிகளைப் பாதுகாப்பது, துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்துவது போன்ற அமெரிக்காவின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கமும் இதில் பிரதிபலிக்கப்படுகிறது.
மாலைத்தீவில், அந்நாட்டு அரசின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ள சிறப்பு தூதர், அமெரிக்கா–மாலைத்தீவு இருதரப்பு உறவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவுள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் அந்நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பொருளாதார விரிவாக்கத்திற்கும் ஆதரவு வழங்கும் வாய்ப்புகளை ஆராய்வதும் இந்த விஜயத்தின் ஒரு பகுதியாகும்.
மேலும், அமெரிக்கா மற்றும் மாலைதீவு இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுடன் நீண்டகால கூட்டாண்மையை அமெரிக்கா மதிப்பதோடு, பிராந்திய பாதுகாப்பும் நிலைத்தன்மையும் குறித்த பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் தொடர்ந்து வலியுறுத்துகிறது என அமெரிக்க வெளியுறவு துறை குறிப்பிட்டுள்ளது.