மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அமெரிக்கா நோக்கிப் பயணித்த ஏர் பிரான்ஸ் (Air France) நிறுவனத்திற்குச் சொந்தமான சர்வதேச விமானமொன்று கனடாவின் மொன்றியால் (Montreal) நகருக்கு அவசரமாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.
பாரிஸிலிருந்து (Paris) அமெரிக்காவின் டெட்ராய்ட் (Detroit) நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே, இவ்விமானம் நேற்று புதன்கிழமை மொன்றியாலிலுள்ள ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (Trudeau International Airport) அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக ‘பிளைட்அவெயர்’ (FlightAware) இணையத் தரவுகள் காண்பிக்கின்றன.
அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் (U.S. Customs and Border Protection) உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, எபோலா பரவல் காரணமாக கொங்கோவிலிருந்து வரும் பயணிகள் வாஷிங்டன் (Washington) நகரூடாக மட்டுமே அமெரிக்காவிற்குள் நுழைய முடியும் என்ற புதிய கடுமையான கட்டுப்பாடு நடைமுறையிலுள்ள சூழலில், கொங்கோவைச் சேர்ந்த குறித்த பயணி “தவறுதலாக” டெட்ராய்ட் நோக்கிய விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்தே விமானம் கனடாவிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் எபோலா வைரஸ் பரிசோதனை
இதேவேளை, கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து அண்மையில் கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்திற்குத் திரும்பிய நபரொருவருக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான விசேட மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபரின் பயணப் பின்னணியைக் கருத்திற் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (Abundance of caution) எபோலா உள்ளிட்ட பல தொற்று நோய்களுக்கான பரிசோதனைகள் அவருக்கு நடத்தப்பட்டு வருவதாக ஒன்ராறியோ சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கான மருத்துவ மாதிரிகள் உத்தியோகபூர்வ ஆய்விற்காக இன்று வியாழக்கிழமை ‘தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு’ (National Microbiology Laboratory) அனுப்பி வைக்கப்படவுள்ளதாகக் கனடா பொதுச் சுகாதார நிறுவனம் (PHAC) தெரிவித்துள்ளது.
தற்போது கொங்கோ மற்றும் அண்டை நாடான உகாண்டாவில் ‘புந்திபுகியோ’ (Bundibugyo) எனப்படும் அரிய வகை எபோலா வைரஸ் பரவல் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இதுவரை சுமார் 600 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன், 139 மரணங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இதன் உண்மையான பரவல் அளவு இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கலாம் எனச் சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.