மெரிக்காவில் பல தசாப்தங்களாக வசித்து வந்த கனடியப் பிரஜை ஒருவர், அங்கு நடைபெற்ற தேர்தல்களில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதாய்வாளர் அலுவலகம் (U.S. Attorney’s Office) தெரிவித்துள்ளது.
பாஸ்டன் நகருக்கு வடக்கே உள்ள மசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தின் சாகஸ் (Saugus) நகரில் வசித்து வந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். அவர் மீது வெளிநாட்டவர் ஒருவர் சட்டவிரோதமாக வாக்களித்தமை (Unlawful voting by an alien) மற்றும் மோசடியானது என்று தெரிந்தே வாக்களித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது குறித்து அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குறித்த நபர் கடந்த 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் நிரந்தர வதிவிட உரிமையைப் (Permanent resident) பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அமெரிக்காவின் உத்தியோகபூர்வ வாக்காளர் பதிவுப் படிவங்களில் தான் ஒரு அமெரிக்கப் பிரஜை எனப் பொய்யான தகவலைக் குறிப்பிட்டு, பல உத்தியோகபூர்வ கூட்டாட்சித் தேர்தல்களில் (Federal elections) சட்டவிரோதமாக வாக்களித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 100,000 டொலர் முதல் 250,000 டொலர் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீதிமன்ற இணையப் பதிவுகளின்படி, அவர் எதிர்வரும் ஜூன் மாதம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது