அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்களே இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் அரசே கறுப்புச் சந்தையை உருவாக்கியுள்ளது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெருக்கடியான காலப்பகுதிகளில் அரசு மிகவும் தாமதமாகவே தீர்மானங்களை எடுக்கின்றது. அண்மைய ‘டித்வா’ புயல் தாக்கத்தின் போதும் அரசு மந்தகதியில் செயற்பட்டமையால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக அமைந்தன.
மத்திய கிழக்கில் மோதல் நிலைமை ஆரம்பித்த நாளிலிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை நாம் வலியுறுத்தினோம். எனினும், எமது ஆலோசனைகளை ஜனாதிபதி அலட்சியப்படுத்தினார். ஒன்றரை மாதத்துக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அரசு கூறியது.
அவ்வாறாயின், இந்த மாதத்தில் மாத்திரம் மூன்று முறை எரிபொருள் விலையை அரசு அதிகரித்தது ஏன்? கையிருப்பில் எரிபொருள் இருக்குமாயின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன? தற்போதைய எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசின் குளறுபடியான வெளிவிவகாரக் கொள்கையினால் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை மீது அதிருப்தியடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசு தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, அனுபவத்துடன் செயற்பட வேண்டும் என்றும், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முறையாக முகாமைத்துவம் செய்ய அரசு தவறியுள்ளது என்றும் அவர் இதன்போது கடுமையாகச் சாடினார்.