சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் சட்டவிரோதமாக முடக்கியுள்ளதற்குக் கனடா உள்ளிட்ட ஏழு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து கனேடிய அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை (22) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்யத் தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் அண்டை நாடுகள் நேட்டோ (NATO) அமைப்பின் உதவியைக் கோரினால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கக் கனடா பரிசீலித்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்குயின்டி தெரிவித்துள்ளார்.
உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
ஈரானின் தற்போதைய தடையால், நாட்டில் பெட்ரோல் விலை கடந்த ஆண்டை விட லிட்டருக்கு 20 சென்ட் வரை அதிகரித்துள்ளது.
ஈரானின் இந்த தடையால் தற்போது இரண்டு கனேடிய சரக்குக் கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் சிக்கியுள்ளன. இந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளில் கனடா நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், உலகளாவிய பொருளாதாரப் பாதிப்புகளைத் தவிர்க்க இராஜதந்திர ரீதியிலான தீர்வுகளைக் காண விரும்புவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.
அடுத்த வாரம் பாரிஸில் நடைபெறவுள்ள G7 நாடுகளின் கூட்டத்தில் இதற்கான முக்கியத் திட்டத்தை அவர் சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.