கனடாவின் ‘ஈஸ்டர்ன் டவுன்ஷிப்ஸ்’ (Eastern Townships) பகுதியில் உள்ள ஷெர்புரூக் (Sherbrooke) நகரின் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக, 41 வயதுடைய பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு 9 மணியளவில், அண்டை வீடு ஒன்றில் மோதல் ஏற்படுவதாக அப்பகுதி வசிப்பவர் ஒருவர் உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு கடுமையான காயங்களுடன் இருந்த பெண் ஒருவரைக் கண்டறிந்தனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த மோதல் நடந்த இடத்திலேயே 18 வயதுடைய இளைஞர் ஒருவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அந்த இடத்தில் கையில் காயங்களுடன் சிறுமி ஒருவரும் கண்டறியப்பட்டார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவரது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்கான பின்னணி மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறிவதற்காக, இரவு முழுவதும் காவல்துறையினரின் விசாரணைகள் தொடர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.