வோன் (Vaughan) நகரில் உள்ள ஒரு மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தீவைப்புச் சதி (Arson) என நம்பப்படுவதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) தெரிவித்துள்ளனர்.
வோன் நகரில் உள்ள மாளிகை ஒன்றை நள்ளிரவில் முற்றிலும் சாம்பலாக்கிய தீ விபத்து குறித்து, தற்போது தீவைப்புச் சம்பவமாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக யோர்க் பிராந்திய பொலிஸார் கூறுகின்றனர்.
நெஷ்வில் (Nashville) மற்றும் ஹண்டிங்டன் (Huntington) வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள ‘மிசுனோ கிரசண்ட்’ (Mizuno Crescent) இல் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 2:30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோது, மாளிகைக் கட்டடம் முழுவதும் கடுமையான தீப்பிழம்புகள் சூழ்ந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
காலை 6 மணியளவில், தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் குடியிருப்புக்குள் யாரும் இருக்கவில்லை என்பதுடன், காயங்கள் எதுவும் ஏற்பட்டதாகவும் பதிவாகவில்லை.
இந்தச் சம்பவம் திட்டமிட்ட தீவைப்பாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம், அது உருவான இடம் மற்றும் விபத்து நடந்த சூழ்நிலைகள் குறித்து மாகாண தீயணைப்புத் தளபதியின் அலுவலகம் (Office of the Fire Marshal – OFM) விசாரிக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.