சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, வரி செலுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இருவர் இன்று புதன்கிழமை (25) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயிலிருந்து இன்று அதிகாலை 3.15 மணிக்கு வருகை தந்த விமானம் மூலம் இந்த இரு சந்தேகநபர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக செல்ல முயன்றபோதே அவர்கள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 08 பயணப் பொதிகளைச் சோதனை செய்த போது, அவற்றுக்குள் மிகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
‘மான்செஸ்டர்’ மற்றும் ‘பிளாட்டினம்’ வகையைச் சேர்ந்த 500 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 1,00,000 சிகரெட் துண்டுகள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி சுமார் 15 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் டுபாயில் தொழில் புரியும் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண் டுபாயில் வேலைத் தள மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் எனவும், கண்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் டுபாயில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.