வவுனியா, வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி (Sunil Senevi) பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 9 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சுனில் செனவி, வெடுக்குநாறி மலையில் காணப்படும் தொல்பொருள் சான்றுகள் அனைத்தும் பௌத்த மதத்திற்குரியவை என்றும், இப்பகுதி விரைவில் அரசாங்க வர்த்தமானி (Gazette) மூலம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ள ச.சிவயோகநாதன் பின்வரும் முக்கிய கருத்துக்களை முன்வைத்துள்ளார்:
வெடுக்குநாறி மலை என்பது நீண்டகாலமாகத் தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தளமாகும். இங்குள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சைவ சமயத்தவர்களால் பல தலைமுறைகளாக வழிபடப்பட்டு வருகின்றது.
முறையான மற்றும் பரந்த ஆய்வுகள் ஏதுமின்றி, தன்னிச்சையாக இத்தளம் பௌத்தர்களுக்குரியது என அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாடுகள் அவர்களின் இனவாத மற்றும் மதவாதப் போக்கை வெளிப்படுத்துவதுடன், இது ஒரு மோசமான அதிகாரத் துஷ்பிரயோகமாகும்.
இத்தகைய அறிவிப்புகள் வரலாற்று உண்மைகளை மறைப்பதுடன், சமூக நல்லிணக்கத்தைப் பாதித்து தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார உரிமைகளை மீறும் செயலாக அமையும்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:
அமைச்சர் தனது கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
வெடுக்குநாறி மலை தொடர்பாக ஒரு சுயாதீனமான மற்றும் விஞ்ஞான ரீதியான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்பகுதி மக்களின் வரலாற்று மற்றும் வழிபாட்டு உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.