கட்டாக்காலி நாய்களுக்காக பாராமரிப்பு விடுதிகள் மற்றும் தகன மயானங்களை அமைப்பதற்காக 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கண்டித்து, கொழும்பு காலி முகத்திடல் முன்பாக விலங்கு நல ஆர்வலர்கள் பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இந்தத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் குறுகிய மனப்பான்மையை விமர்சிக்கும் வகையில், விலங்கு நல அமைப்பினர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இது குறித்து விலங்கு நல அறக்கட்டளையின் உறுப்பினர் ஷாமினி ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக விலங்குகள் நலனுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், இத்தகைய முட்டாள்தனமான திட்டத்தை நான் இதுவரை கண்டதில்லை. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதே நிரந்தர தீர்வாகும்.
மாறாக, பெரும் தொகையைச் செலவிட்டு அனாதை விடுதி மற்றும் தகன மயானங்களை அமைப்பதன் மூலம் என்ன பயன்? அந்த விடுதிகளில் அடைக்கப்படும் விலங்குகள் போதிய உணவின்றி, நோயினால் இறக்கும் போது அவற்றை எரித்து அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது..
2016-2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனுராதபுரத்திலும் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாறான திட்டம், போதிய பராமரிப்பின்றி விலங்குகள் உயிரிழந்ததால் மூடப்பட்டது.