வலி. வடக்கு இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடன் நிறுத்துமாறு தவிசாளர் அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம், வயாவிளான் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து, எவ்வித சட்டப்பூர்வ அனுமதியுமின்றி அமைக்கப்பட்டு வரும் இராணுவ மருத்துவமனைக் கட்டுமானங்களை உடனடியாக நிறுத்துமாறு வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன், யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதிக்குக் கடுமையான கட்டளை ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
வயாவிளான் பகுதியில் உள்ள மக்களின் தனியார் காணிகளை உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினர் நீண்டகாலமாகத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், பிரதேச சபையின் எவ்வித அனுமதியுமின்றி அங்கு சட்டவிரோதமாக இராணுவ மருத்துவமனை ஒன்றின் கட்டுமானப் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டு, கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு இராணுவத் தரப்பிற்குத் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த உத்தரவுகளையும் மீறி இராணுவத்தினர் தொடர்ந்து கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே, வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ. சுகிர்தன் இந்த அதிரடி அறிவித்தலை அனுப்பியுள்ளார். அந்த அறிவித்தலில், எதிர்வரும் புதன்கிழமைக்குள் இந்தச் சட்டவிரோதக் கட்டடங்கள் அனைத்தும் இடித்து அகற்றப்பட வேண்டும் அல்லது உரிய உள்ளூராட்சி அமைப்பிடம் முறையான அனுமதி பெறப்பட வேண்டும் எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதிக்கு எதிராகப் பிரதேச சபைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, இந்த அறிவித்தலின் பிரதிகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.