‘சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 4’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் சந்தோஷ் பிரதாப் கதையின் நாயகனாக – காதலிக்கும் இளைஞனாக- நடித்திருக்கும் ‘சிக்னல் அட் 11.30’ எனும் திரைப்படம் – ரொமான்டிக் திரில்லராக தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘திருவாளர் பஞ்சாங்கம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11:30’ திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயபிரகாஷ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன் – டொக்டர் ஷிவானி சுப்பிரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”படத்தின் தலைப்பு – கதையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதன் பின்னணியை விவரிக்க தொடங்கினால்.. ரசிகர்கள் பெரிய திரையில் பார்த்து தெரிந்து ரசிக்க வேண்டிய ஒரு விடயம் முன்னரே வெளியாகி விடும்.
இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. இதில் இடம் பிடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பிரத்யேக இலக்கு உண்டு. காதல்- சஸ்பென்ஸ் -எமோஷன்- ட்விஸ்ட் – என பல அம்சங்களுடன் திரைக்கதை உருவாகி இருக்கிறது” என்றார்.