நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பிரபலமான பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
118 பவுன் நகை கொள்ளை:
நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர் பிரபலமான பெண் யூடியூபர் மதுமிதா. இவர் தன்னிடம் உள்ள ஏராளமான பணம் மற்றும் நகைகளை வெளிக்காட்டும் வகையில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். கடந்த 24-ஆம் திகதி மாலை இவர் கணவருடன் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து 118 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வாலிபர் அதிரடி கைது:
சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டி (30) என்ற இளைஞரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
ரீல்ஸால் வந்த வினை:
போலீசாரிடம் இசக்கி பாண்டி அளித்த வாக்குமூலத்தில், மதுமிதாவின் சமூக வலைத்தள வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்து, அவரிடம் பெருமளவு நகைகள் மற்றும் பணம் இருப்பதை அறிந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகக் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆடம்பரத்தைக் காட்டிப் பகட்டுச் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
#YouTuberMadhumitha #GoldTheft #Kanyakumari #Nagercoil #TNPolice #CrimeNews #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive