தன்னை ஒரு ‘ஈழத் தமிழர்’ என்று வெளிப்படையாக அறிவித்ததைத் தொடர்ந்து இணையவழியில் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்மறை பிரச்சாரங்களுக்கு உள்ளாகியுள்ள நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரித்தானியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர் அமைப்புகளும் மாணவர் சங்கங்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
தனது புதிய நெட்ஃபிலிக்ஸ் திரைப்படமான ‘Best of the Best’ ஐ விளம்பரப்படுத்தும் போது, மைத்ரேயி ராமகிருஷ்ணன் தான் ஒரு ஈழத் தமிழ் பெண் என்பதை உறுதிப்படுத்தியதுடன், தன்னை ‘இலங்கையர்’ (Sri Lankan) என அழைப்பதை நிராகரித்தார். இதனையடுத்தே, பேரினவாத தீவிரவாத சமூக வலைத்தளக் கணக்குகள் மூலமாக அவரது திரைப்படத்திற்கு 1-நட்சத்திர மதிப்பீடுகளை (1-star review-bombing) வழங்குமாறும், செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி எதிர்மறையான விமர்சனங்களை பதிவிடுமாறும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
கனடா தமிழ் மாணவர் சங்கங்களின் அறிக்கை
கனடாவின் 15 தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் கனடா தமிழ் இளைஞர் அமைப்பு (TYO Canada) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“நாங்கள் ஈழத் தமிழர்கள் என்று எங்களை அடையாளப்படுத்துகிறோம். எங்கள் அடையாளம் எங்கள் தனித்துவமான வரலாறு, பாரம்பரியம், மாவீரர்களின் தியாகங்கள், தாயகம் மற்றும் மக்களிடமிருந்து வருகிறது. நாங்கள் இலங்கையர்கள் அல்ல. எங்கள் மீது திணிக்கப்படும் எந்தவொரு அடையாளத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.”
மைத்ரேயியின் “ஒரு தமிழ் ஈழப் பெண்ணாக நான் யார் என்பதில் பெருமையடைகிறேன்” என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ள அந்த அறிக்கை, “எம்மை உரக்கச் சொல்லி நினைவூட்டியதற்கு நன்றி மைத்ரேயி; நாம் மறைப்பதற்கு எதுவுமில்லை, விளக்குவதற்கும் எதுவுமில்லை” என அவருக்கு நேரடியாக நன்றி தெரிவித்துள்ளது.
டொராண்டோ பல்கலைக்கழகம், யோர்க் பல்கலைக்கழகம், மெக்மாஸ்டர், வாட்டர்லூ மற்றும் ஒட்டாவா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட முன்னணி உயர்கல்வி நிறுவனங்களின் தமிழ் மாணவர் அமைப்புகள் இதில் கையெழுத்திட்டுள்ளன.
சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகளின் ஆதரவு
பிரித்தானியாவின் 27 பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள், 11 இளைஞர் அமைப்புகள் மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நார்வே, டென்மார்க், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தமிழ் இளைஞர் அமைப்புகள் இணைந்து மற்றொரு சர்வதேச அறிக்கையை வெளியிட்டுள்ளன.
அதில், ஒருவர் தனது அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவது அடிப்படை மனித உரிமை என்றும், அதற்காக இணையவழியில் துன்புறுத்துவது அல்லது அவரது கலை வாழ்க்கையை சீர்குலைக்க முயல்வது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நெருக்கடியான தருணத்தில் மைத்ரேயியை தனியாக எதிர்கொள்ள விடமாட்டோம் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
கனடாவின் மிசிசாகா (Mississauga) பகுதியில் ஈழத் தமிழ் பெற்றோருக்குப் பிறந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன், நெட்ஃபிலிக்ஸின் ‘Never Have I Ever’ தொடர் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது