மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) வியாழக்கிழமை வெளியிட்ட “மத்திய கிழக்கில் இராணுவ மோதல் அதிகரிப்பு: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மனித மேம்பாட்டுத் தாக்கங்கள்” எனும் பூர்வாங்க மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
புலம்பெயர் தொழிலாளர்கள்: 2025 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களில் 80.2 சதவீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளனர். போர்ச் சூழலால் இவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் (Remittances) பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
சுற்றுலாத் துறை வீழ்ச்சி: 2026 பெப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 9,976 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, மார்ச் 1 முதல் 8 வரையான காலப்பகுதியில் 5,956 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 40 சதவீத வீழ்ச்சியாகும்.
தேயிலை ஏற்றுமதி பாதிப்பு: போர் காரணமாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் வாரத்திற்கு சுமார் 10 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி: வளைகுடா நாடுகளுடனான ஏற்றுமதித் தொடர்பு பலவீனமடைவதால் விவசாயிகளின் வருமானம் குறைதல், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் உற்பத்தித் திறன் முடக்கம் போன்ற சவால்களை இலங்கை எதிர்கொள்கிறது.
பிராந்திய தாக்கம்:
இந்த மோதலால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சுமார் 97 பில்லியன் முதல் 299 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வர்த்தக இழப்பு ஏற்படக்கூடும். மேலும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 14 நாடுகளில் உள்ள சுமார் 8.8 மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.