போதைப்பொருளை ஒழிப்பதற்கான ‘ முழு நாடுமே ஒன்றாக ’ தேசிய செயற்பாட்டு சபை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று ( 18) கூடியது. இக்கூட்டத்தில், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அதிரடி முடிவுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டது.
முக்கிய தீர்மானங்கள் மற்றும் ஜனாதிபதியின் பணிப்புரைகள்:
சட்டத் திருத்தம்: கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கும், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் உள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்கும் சட்டத் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
நம்பிக்கையை உறுதிப்படுத்துதல்: போதைப்பொருள் அழிக்கப்படுவதை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதன் மூலம் அரச நடவடிக்கைகளின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
போதைப்பொருள் குற்றங்களுக்காக தனி நீதிமன்றங்களை மாகாண மட்டத்தில் நிறுவுதல் மற்றும் பொலிஸ் சட்டப் பிரிவுகளை பலப்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ச்சியான செயற்பாடு: நாட்டின் பொருளாதார அல்லது சமூக மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் எக்காரணம் கொண்டும் முடங்கக் கூடாது என ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் முன்னேற்றம் வருமாறு:
கைது செய்யப்பட்டவர்கள்
124,412 பேர்
ஐஸ் போதைப்பொருள்
1930 கிலோ கிராம்
ஹெரோயின்
1066 கிலோ கிராம் 352 கிராம்
கஞ்சா
4520 கிலோ கிராம்
கொக்கைன்
270 கிலோ கிராம் (வரலாற்றில் அதிகூடிய தொகை)
போதை மாத்திரைகள்
983,143
சட்டவிரோத சிகரெட்டுகள்
558,300
கைது செய்யப்பட்டவர்களில் 1,772 சிறுவர்களும், 81 சிறுமிகளும் அடங்குவது அதிர்ச்சியளிக்கும் தகவலாகப் பகிரப்பட்டது.
புனர்வாழ்வு மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்கள்:
மனநல சிகிச்சை, தங்குமிட சிகிச்சை மற்றும் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு உள்ளிட்ட 06 பிரதான உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்காகத் தனித்தனி புனர்வாழ்வுத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் 1818 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.