ள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முல்லைத்தீவு முள்ளியவளை சந்தி அம்மன் பகுதியில் இன்று (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
ஈழம் கவி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடத்தப்பட்டது.
2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூரும் வாரம் இன்று முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதோடு, பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது. அப்போது குறித்த பகுதிகளில் வசித்த மக்களுக்கு உணவு, மருந்து என எதுவுமே கிடைக்கப்பெறாத நிலை காணப்பட்டது.
அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வழியின்றி உச்சக் கட்ட தாக்குதல்களுக்கும் வறுமைக்கும் அக்கால மக்கள் முகங்கொடுத்தனர். அந்நாட்களில் தமிழ் மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே பலரின் உயிர் காக்கும் உணவாக இருந்தது.
அந்தக் கஞ்சியை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீது கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்த வரலாற்று உண்மைகளை உலகுக்கு எடுத்துரைத்து, எதிர்கால சந்ததிக்கு நினைவுபடுத்தவும் தமிழினப் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்படுவது வழக்கமான செயற்பாடாகிறது.
இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.ஜீட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.