முல்லைத்தீவு- மந்துவில் பகுதியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களும், சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக குணசேகரவின் விசேட கண்காணிப்பு உத்தரவின் கீழ் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக திருடப்பட்ட தொலைபேசி கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவு நீதவானின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், குறித்த வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் உள்ளிட்ட மொத்தம் 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளை பயன்படுத்தி வாங்கப்பட்ட பொக்ஸ், எஞ்சின் , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மேலும் பல பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளில், இரணைப்பாலை, மந்துவில், சிவநகர், 9ஆம் வட்டாரம் மற்றும் 10ஆம் வட்டாரம் பகுதிகளிலும் இதே குழுவினரால் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அத்துடன் மேலும் 2023 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இக்குழு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மந்துவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட உறவினர்கள் அடங்கிய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம்( 24) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து, எதிர்வரும் (07.04.2026) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.