அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கடுமையான வீழ்ச்சிக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எழுந்துள்ள பாரிய கவலைகளை அடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், நாடு மீண்டும் ஒருமுறை ஆபத்தான பொருளாதார எச்சரிக்கை சமிக்ஞைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இன்று (21) விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுச் சுமை மற்றும் தீவிரமடைந்து வரும் பொருளாதார அநிச்சயத்தன்மை ஆகியவற்றை ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது என வலியுறுத்தியுள்ள சஜித் பிரேமதாச, தற்போதைய நிலைமைகளுக்கு அவசர தேசிய அளவிலான கூட்டுத் தீர்வு (National response) அவசியமாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“நாடு மீண்டும் ஒருமுறை ஆபத்தான பொருளாதார அச்சுறுத்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதனாலேயே, இன்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் ஒன்றிணைந்துள்ளன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பேராபத்து குறித்து விரிவாகக் கலந்துரையாடி, அவசர தீர்வுகளை எட்டும் பொருட்டு உடனடியாக ‘சர்வகட்சி மாநாடு’ (All Party Conference) ஒன்றைக் கூட்டுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சிகள் கூட்டாகத் தீர்மானித்துள்ளதாக சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமைகள் மேலும் மோசமடைந்து கட்டுப்பாட்டை மீறிச் செல்வதற்கு முன்னர், ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டுத் தீர்வுகளைக் கண்டறிவதே இந்த அவசர நகர்வின் முதன்மை நோக்கமாகும் என அவர் விவரித்துள்ளார்.
அண்மைக்காலமாக வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தையில் (Forex market) ஏற்பட்டுள்ள கடுமையான ஏற்ற இறக்கங்கள் மற்றும் இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பலவீனமடைதல் காரணமாக நாட்டில் தீவிரமடைந்து வரும் அரசியல் விவாதங்களுக்கு மத்தியிலேயே எதிர்க்கட்சிகளின் இந்த அவசர கூட்டுத் தீர்மானம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.