நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளையும் எரிபொருள் விலையேற்றத்தையும் சாட்டாகக் கொண்டு, பௌத்த வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொசன் பௌர்ணமி உற்சவத்தைக் குறைத்து மதிப்பிடவோ அல்லது முடக்கிவிடவோ முடியாது என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சர்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்பண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இம்முறை பொசன் வாரமானது ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 02 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 29 ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தில், மிஹிந்து மகா ரஹதனார் இலங்கைக்கு வருகை தந்து 2334 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எரிபொருள் விலை உயர்வு, பொருளாதாரச் சுமை எனப் பல்வேறு சவால்கள் நாட்டைச் சூழ்ந்திருக்கலாம். ஆனால், இவற்றை ஒரு காரணமாகக் கூறி, எமது வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி நிகழ்வைத் தள்ளிப்போடவோ அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைக்கவோ கூடாது.
மத ரீதியான சடங்குகள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பேணுவது எமது கடமை. இவ்வாறான கடினமான காலங்களிலும், மிஹிந்து மகா ரஹதனாரின் வருகையை நினைவு கூரும் இந்த உன்னத நிகழ்வை மிகவும் அர்த்தமுள்ளதாகவும், பக்தர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்
இம்முறை பொசன் காலப்பகுதியில் பக்தர்களின் வருகையைச் சீர்செய்யவும், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் வழிகாட்டலில், அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை இடையில் விசேட பேருந்து சேவைகளும், ரயில் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு இலவசத் தொடருந்து சேவைகளும் வழங்கப்படவுள்ளன. இம்முறை பொசன் சேவைகளுக்காக மாத்திரம் 400 இற்கும் மேற்பட்ட பேருந்துகள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், மேலதிக தேவைகளுக்காக நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பேருந்துகள் வரவழைக்கப்படவுள்ளன.
பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அன்னதான சாலைகள் சுகாதார அதிகாரிகளிடம் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு செய்யப்படாத மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறும் தான சாலைகள் உடனடியாக அகற்றப்படும். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைத் தவிர்த்து, சூழலைப் பாதுகாக்கும் வகையில் பொசோன் உற்சவத்தை முன்னெடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
பொசன் வாரத்தில் மிஹிந்தலைக்கு வருகை தரும் இளைஞர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் மிகுந்த ஒழுக்கத்துடனும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனப் பொலிஸார் அறிவுறுத்தினர். ஆபாசமான சத்தங்களை எழுப்புவது அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
நாட்டின் தற்போதைய சூழலுக்கு மத்தியிலும், மதம் மற்றும் கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளித்து, மிஹிந்து மகா ரஹதனார் ஆற்றிய தொண்டிற்கு மதிப்பளிக்கும் வகையில், ஒட்டுமொத்த தேசமும் ஒன்றிணைந்து பொசன் உற்சவத்தை மிகவும் பாதுகாப்பானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் கொண்டாடப் பங்களிப்பு வழங்க வேண்டும் என்றார்.