ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவையிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், இன்று (28) குறைந்தது 34 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தபோது, அதன் பிரேக் தொகுதியில் (Braking system) ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேரிட்டுள்ளது.
பெரிய அளவிலான விபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, சாரதி பஸ்ஸை பிரதான வீதியோரத்திலுள்ள மண் திட்டில் மோதி நிறுத்தியுள்ளார்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலதிக சிகிச்சை தேவைப்பட்ட நான்கு மாணவர்கள் டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வரும் ஏனைய மாணவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என மாவட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.