திருமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புலம்பெயர்வு தகவல் மையம் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
2025–2026 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், சர்வதேச புலம்பெயர்வு கொள்கை அபிவிருத்தி மையமான ICMPD, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு (MOFAFET) மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சட்டபூர்வமான மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வு தொடர்பான தகவல் மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமூக மட்ட ஆதரவு பொறிமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இக்கலந்துரையாடலில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதலாவது செயலாளர் திருமதி Andrea Kiensat,
ICMPD ஒருங்கிணைப்பாளர் திரு. Shamir Shalih, ச.சுமித்திரா counseller icmpd, கிழக்கு மாகாண வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அதிகாரி மற்றும் திருகோணமலை மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி அதிகாரி (FEDO) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் MIC திட்டத்தின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள், அடைந்துள்ள முன்னேற்றங்கள், கள மட்டத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், குறிப்பாக ஜப்பானிய மற்றும் கொரிய மொழிப் பயிற்சிகளை வழங்கும் வெளிநாட்டு மொழிப் பயிற்சி தொடர்பான முன்மொழிவும் கலந்துரையாடப்பட்டது.
இத்தகைய மொழிப் பயிற்சிகள் மூலம் ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு தேவையான மொழித்திறன்களை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான புலம்பெயர்வை ஊக்குவிக்க முடியும் எனக் கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மோசடி தடுப்பு, தகவல் மற்றும் வழிகாட்டல் சேவைகள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கு இக்கலந்துரையாடலில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.