பீல் பிராந்தியத்தின் மத்திய கொள்ளைத் தடுப்பு பிரிவு (Central Robbery Bureau) விசாரணையாளர்கள், பிராம்டனில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி ரைடு-ஷேர் வாகன பறிமுதல் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வாடிக்கையாளராக நடித்துக் கொண்டு முகமூடி அணிந்திருந்த சந்தேக நபர், கையடக்கத் துப்பாக்கியை காட்டி, ஓட்டுநரை வாகனத்திலிருந்து இறங்குமாறு மிரட்டி, பின்னர் அந்த வாகனத்துடன் தப்பிச் சென்றார்.
அடுத்து, மார்ச் 2, திங்கட்கிழமை இரவு சுமார் 11:05 மணியளவில், Salisbury Circle பகுதியில் பயணியை ஏற்றுக்கொண்ட பின்னர் மற்றொரு ரைடு-ஷேர் ஓட்டுநரும் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு காரைக் பறிகொடுத்தார். இந்தச் சம்பவத்திலும் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் வாகனத்துடன் தப்பினார். 22 Division காவல் அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு, இரண்டாவது திருடப்பட்ட வாகனத்தை அருகில் கண்டுபிடித்தனர். சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்றார். தப்பும்போது ஏற்றப்பட்ட (loaded) துப்பாக்கியை கைவிட்டு ஓடினார். சிறிது தூரத்தில் அவரை காவல் அதிகாரி கைது செய்தனர். பின்னர் அந்த துப்பாக்கியும் மீட்கப்பட்டது.
இதன் விளைவாக இரு சம்பவங்களிலும் தொடர்புடையவர் பிராம்டனில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞர் என அடையாளம் கண்டுள்ளனர். மேலதிக விசாரணைகளைக் கருத்திற்கொண்டு காவல்துறையினர் குற்றவாளியின் புகைப்படத்தைப் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.