வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகளின் ஆலோசனையின் பேரில் நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 15 பேர் விசேட அதிரடிச் சோதனையின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை (21) அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை இந்த விசேட சோதனையை முன்னெடுத்தனர்.
இரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள அரலிய வீடமைப்புத் தொகுதியிலேயே இச்சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 கூர்மையான ஆயுதங்கள், சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்துகொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ‘எல்லாவல தர்மசிறி பெரேரா’ (அல்டோ தர்மே) மற்றும் ‘சந்தோ’ (கவிந்து தனஞ்சய) ஆகியோரின் கீழ் இயங்கும் தாக்குதல் குழுவைச் சேர்ந்த 11 பேரும், ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவரும் மற்றும் பெண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.