பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா புறநகர்ப் பகுதியில் இயங்கி வந்த தனியார் கல்வி நிலையம் ஒன்றின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், 14 சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மீட்புக் குழுவினர் ஒரு மணி நேரத்திற்குள் முழு மீட்புப் பணிகளையும் நிறைவு செய்தனர். இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். இந்த விபத்தில் மேலும் 5 சிறுவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பாகிஸ்தானின் அவசர சேவை பிரிவின் ஊடகப் பேச்சாளர் பாரூக் அஹமட் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூர விபத்து குறித்துப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்த சிறுவர்கள் விரைந்து குணமடையப் பிரார்த்திக்கிறேன். அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் உடனே வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில், “இது நெஞ்சைப் பிளக்கும் ஒரு பெரும் துயரம். 14 அப்பாவி உயிர்களின் இழப்பு என்பது அளவிட முடியாத துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் அனைத்தும் தங்களின் குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களைச் சுற்றியே உள்ளன” எனப் பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தகுதி குறைவான முறையில் கல்வி நிலையத்தை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.