சென்னை
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் மூத்த நடிகை செளகார் ஜானகி (வயது 94) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். பல தலைமுறைகளைக் கடந்து தனது நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்த மூத்த ஆளுமையின் மறைவு திரைத்துறையினரைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவமனையில் உயிர் பிரிந்தது:
வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்புகள் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்த செளகார் ஜானகி, சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணியளவில் காலமானார்.
வானொலி முதல் வெள்ளித்திரை வரை:
1931-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர் ஜானகி. சிறு வயதிலேயே சென்னையில் வசித்த இவர், குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சிகளிலும், நாடகங்களிலும் பங்கேற்று வந்தார். வானொலியில் இவரது குரலைக் கேட்ட தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி இவரைத் தெலுங்குப் படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால், அதற்கு பெற்றோர் சம்மதிக்காததால், உறவினர் ஒருவருக்கு இவரைத் திருமணம் செய்து வைத்தனர்.
‘செளகார்’ ஜானகியாக மாறிய தருணம்:
திருமணத்திற்குப் பின் கணவருடன் விஜயவாடாவில் வசித்து வந்த ஜானகிக்கு, சினிமா ஆசை மீண்டும் துளிர்த்ததால் சென்னை வந்து பி.என்.ரெட்டியைச் சந்தித்தார். அவரது சிபாரிசால், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ என்ற தெலுங்கு படத்தில் தனது 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். தோற்றமும் நடிப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றதால் அன்றிலிருந்து அவர் ‘செளகார்’ ஜானகி ஆனார்.
சிவாஜி, எம்.ஜி.ஆர் உடன் கிளாசிக் ஹிட் படங்கள்:
மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வளையாபதி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் எனப் பல முன்னணி நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகளைப் பெற்றார். பாக்கியலட்சுமி, படிக்காத மேதை, பாலும் பழமும், பார் மகளே பார், புதிய பறவை, நீர்க்குமிழி, பாமா விஜயம், எதிர் நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு உள்ளிட்ட பல காலத்தால் அழியாத படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். காதல், வீரம், பாசம், கோபம், நகைச்சுவை என அனைத்துப் பரிமாணங்களிலும் வெளுத்து வாங்கினார்.
385 திரைப்படங்கள்; சொந்தக் குரலில் டப்பிங்:
தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்கில் என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் 385-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். எந்த மொழியானாலும் அவரே சொந்தமாக டப்பிங் பேசுவது இவரது தனிச்சிறப்பாகும். கே.பாலசந்தரின் நாடகங்களில் 300-க்கும் மேற்பட்ட முறை மேடையேறியுள்ள இவர், ‘காவியத்தலைவி’, ‘ரங்கராட்டினம்’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.
ஆன்மீகமும் பத்மஸ்ரீ அங்கீகாரமும்:
1965-ல் சத்ய சாய்பாபாவைச் சந்தித்த பிறகு அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு, இவரது ஈடு இணையற்ற கலைச் சேவையைப் பாராட்டும் விதமாக கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.
#SowcarJanaki #RIPSowcarJanaki #VeteranActress #TamilCinema #Kollywood #Tollywood #PadmaShriSowcarJanaki #MGR #SivajiGanesan #TamilNews #ChennaiNews #TrendingNewsTN #LatestNewsTN #ViralNewsTN