சந்தை மதிப்புள்ள நடிகர் பரத் மற்றும் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி ஆகியோர் இணைந்து முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி வெளியிட்டிருக்கிறார்.
இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்தி, பவானி ஸ்ரீ, சங்கீதா, அபர்னதி, ஆனந்த் நாக் , டி எம் கார்த்திக், ‘சிங்கம்’ ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் மற்றும் டொக்டர் என். யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வில் படக் குழுவினருடன் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி இப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் அஜய் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை விட கூடுதலான சிறப்பம்சம் அதிகம் இடம் பிடித்திருக்கிறது என்ற நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது.
அத்துடன் பின்னணி இசை மற்றும் காட்சிகள் திரில்லர் ஜேனர் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது, இதனால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.