நாட்டில் பணம் அச்சிடப்படுகின்றமை (Money printing), நாணய விநியோகம் (Money supply) மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று வீதங்கள் (Exchange rates) தொடர்பாகச் சமூகத்தில் பரப்பப்பட்டு வரும் தவறான மற்றும் திசைதிருப்பும் வகையிலான அறிக்கைகள் குறித்துப் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய மிக முக்கியமான மேக்ரோ-பொருளாதாரப் பொருள்கள் (Macro-economic subjects) மற்றும் அதன் தொழில்நுட்பக் காரணிகள் குறித்து, அது சார்ந்த முறையான நிபுணத்துவம் மற்றும் உத்தியோகபூர்வ தொழில்நுட்ப அறிவு (Technical expertise) கொண்ட தகுதிவாய்ந்த நபர்களால் மட்டுமே விளக்கமளிக்கப்பட வேண்டும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது அத்தகைய எந்தவொரு துறைசார் நிபுணத்துவமும் இல்லாத ஒரு குறிப்பிட்ட தரப்பினரால், திட்டமிட்ட அடிப்படையில் நுகர்வோரையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் தவறான அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருவதாக மத்திய வங்கி கவலை வெளியிட்டுள்ளது.
எனவே, அரசியல் அல்லது தனிப்பட்ட உள்நோக்கங்களுடன் பரப்பப்படும் இவ்வாறான போலியான பொருளாதாரக் கூற்றுகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இது குறித்துப் பொதுமக்கள் எப்போதும் விழிப்புடனும் விவேகத்துடனும் (Vigilant) செயற்பட வேண்டும் என்றும் இலங்கை மத்திய வங்கி தனது உத்தியோகபூர்வ செய்தி அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளது.