சென்னை:
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடக்கக் கட்டத்தில் தான் இருக்கிறது என்றும், இது தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில், எல்.எல்.எம். சட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக ஒற்றைச் சாளர அடிப்படையில் இணைய வழியில் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு, தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்குச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கல்லூரி ஒதுக்கீடு ஆணைகளை இன்று வழங்கினார்.
திட்ட அறிக்கை பணிகள்:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், \”தற்போது பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டம் மிகவும் தொடக்கக் கட்டத்திலேயே இருக்கிறது. அதற்கான மதிப்பீட்டுப் பணிகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.
மக்கள் மற்றும் மீனவர்களின் நலன்களுக்கு எதிராகத் தவெக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளார். புதிய தலைமைச் செயலகத் திட்டம் தொடர்பான அனைத்து மதிப்பீட்டுப் பணிகளும் முடிவடைந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிடும்.
திமுகவுக்குக் கேள்வி:
தற்போது வரை, தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கட்டும் திட்டம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. திட்டம் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்போதே, திமுக நீதிமன்றத்தை நாடுவது ஏன்? திட்டத்தைத் தொடக்க நிலையிலேயே முடக்குவதற்கான அவசரம் ஏன்? இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் உரிய பதில் அறிக்கையைத் தமிழக அரசு தாக்கல் செய்யும்\” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
#MinisterNirmalKumar #Pattinapakkam #NewSecretariat #TVKGovt #DMK #CMVijay #LLMCounseling #FishermenProtest #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive