தித்வா நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான முறையான விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை உடனடியாக உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்துவதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட 24 இலட்சம் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமீபத்திய சூறாவளி இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 7 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 24 இலட்சம் தனிநபர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 6,088 வீடுகள் முழுமையாகவும், 18,000 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தினால் 670 பேர் உயிரிழந்துள்ளதோடு, 155 பேர் காணாமல் போயுள்ளனர். உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, சுமார் 4.1 பில்லியன் டொலர் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்ட பின்னரும், அரசாங்கத்தின் நிவாரணப் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன. நிவாரணப் பணிகள் தாமதமாவதற்கு அரச அதிகாரிகளின் திறமையின்மையே காரணம் என அரசாங்கம் காட்ட முயல்கிறது. ஆனால், உண்மையில் இது அதிகாரிகளின் தவறு அல்ல, அரசாங்கத்தின் பலவீனம், திறமையின்மை மற்றும் முறையான திட்டமிடல் இல்லாமையே ஆகும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் போன்றவர்கள் குறைந்த வசதிகளுடனேயே பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இக்கட்டான சூழலில் தங்களை அர்ப்பணித்துச் செயல்படும் இவர்களின் மன உறுதியைச் சிதைக்கும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது.
நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான முறையான விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை உடனடியாக உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். ஊடகங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்துவதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட 24 இலட்சம் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான உண்மையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு உரிய வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.