நியூசிலாந்தின் வட தீவுப் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை வீசி வரும் கடும் சூறாவளியினால் ஏற்பட்ட மழையினால் அந்நாட்டின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.
நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெலிங்டன் பகுதியில் மணிக்கு சுமார் 193 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான அதிவேகமாக வீசிய காற்றாகும். சில கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் 240 கிலோ மீற்றர் வரை பதிவாகியுள்ளது.
பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில், சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன.
பெப்ரவரி மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மொத்த மழையும் ஒரே நாளில் பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வைராப்பாவில் மட்டும் ஒரே இரவில் 256 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சீரற்ற வானிலையினால் வெலிங்டன், நேப்பியர் மற்றும் பால்மர்ஸ்டன் நார்த் விமான நிலையங்களில் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளும் காலை வேளை இரத்து செய்யப்பட்டுள்ளன. பிற்பகலுக்கு பின்னர் ஒரு சில சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குக் நீரிணை ஊடான படகுச் சேவைகள் மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் ஸ்டேட் ஹைவே 1 உள்ளிட்ட முக்கிய வீதிகள் மூடப்பட்டுள்ளன. ரங்கிதிகேய் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கிக்கொண்டுள்ளன.
துரதிர்ஷ்டவசமாக, சனிக்கிழமை அன்று வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்தில் இருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இந்தக் காற்றழுத்த மண்டலம் தற்போது தென் தீவை நோக்கி நகர்ந்து வருவதால், நாளை அங்கேயும் பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.