பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகளை கூட்டு எதிர்க்கட்சி (Joint Opposition) வன்மையாகக் கண்டித்துள்ளது.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மனிதக் கழிவுகள், சாணம், அழுகிய தக்காளி மற்றும் எரியும் பட்டாசுகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து அக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தனது “அருவருப்பையும் சீற்றத்தையும்” வெளிப்படுத்தியுள்ளது.
மக்களின் வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதையும், ஊழல்களையும் அம்பலப்படுத்துவதைத் தடுப்பதற்காக ஜே.வி.பி (JVP) “காடைத்தனம் மற்றும் மிரட்டல்” போன்ற வழிமுறைகளைக் கையாளுவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பொதுச் சொத்துக்களை அழித்தல் மற்றும் கொலைகள் உள்ளிட்ட அந்த அரசியல் கட்சியின் வன்முறை கலந்த கடந்த கால வரலாற்றினை சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, நியாயமான மக்கள் போராட்டங்களை மௌனிக்கச் செய்யும் முயற்சிகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் செல்வம் கொள்ளையடிக்கப்படுவதற்கெதிராக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தைத் தாம் தொடரப்போவதாகவும், இவ்வாறான மிரட்டல்களால் தமது குரலை ஒடுக்க முடியாது என்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுதியளித்துள்ளது.