நாட்டில் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே தவிர அரசியல் பழிவாங்கல்கள் அல்ல. கடந்த காலங்களில் குறிப்பிட்ட அரசியல் வர்க்கத்தினருக்கும், ஆதாரவாளர்களுக்கும் சட்டம் தன் கடமையை செய்ய தவறியதாக குற்றச்சாட்டுகள் காணப்பட்டன. அத்தகைய நிலைமை தற்போது மாற்றப்பட்டுள்ளது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தெரிவித்ததாவது,
நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்று முக்கிய கைது நடவடிக்கைகள், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அல்ல. கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் வர்க்கத்தினருக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியதாகவும், அதன் காரணமாகவே பாதாள உலகக் குழுவினரின் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் அரசியல் பின்னணியுடன் தொடர்ந்து நீடித்து வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது அந்த நிலைமை மாற்றப்பட்டு, பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துதல், நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுத்தல், பாதாள உலகக் குழுவினருக்கு உதவுதல் மற்றும் அரச வங்கிகளில் கடன்களைச் செலுத்தாமல் ஏமாற்றுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடுமின்றிச் சட்டம் கடுமையாகப் நடவடிக்கைகளை எடுகக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையின் சொத்துக்களை யாராவது முறைகேடாகப் பெற்றிருந்தால், அவர்கள் அவற்றை இப்போதே சரிசெய்துகொள்ள வேண்டும்.
குறித்த கைதுகளை எதிர்க்கட்சிகள் அரசியல் பழிவாங்கல் என்று விமர்சிப்பது உண்மைக்கு புறம்பானது. நாட்டின் கடந்த கால வரலாற்றை மக்கள் மறந்துவிடவில்லை. கடந்த 1983 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்தவை, அதற்குப் பின்னர் சுமார் 70,000 இளைஞர்கள் பழிவாங்கப்பட்டமை, அரசியல் ரீதியாக முரண்பட்ட அரச அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அன்றைய அரசியல் அமைப்பிற்கு எதிராகச் செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டமை ஆகியவையே உண்மையான பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆகும்.
தற்போது அரசாங்கத்திற்கு இவர்களால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும், நீதிமன்றங்களின் எண்ணிக்கையை 3 இல் இருந்து 11 ஆக உயர்த்தி, தேவையான அதிகாரிகளை நியமித்து சட்ட அமுலாக்க நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதால், சட்டம் தனது கடமையைச் சுயாதீனமாகச் செய்கிறது. இதனை பொதுமக்களும் ஒரு சாதாரண விடயமாகவே கருதுகின்றனர்.
மேலும், நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்று கூறுமுடியாது. கடந்த ஒன்றரை வருடங்களாக கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவகிறது.
டெங்குவில் உள்ள 4 மாறுபாடுகளில் தற்போது பரவி வரும் குறிப்பிட்ட ஒரு மாறுபாடு தீவிர காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறான பாதிப்பு அதிகரிப்பு ஏற்படுவது வழக்கம் என்பதால், தற்போது பதிவுகள் அதிகமாக உள்ளன. பிரதமரின் தலைமையின்கீழ் கொழும்பு மாவட்டத்தில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் தூய்மையைப் பேண பொதுமக்களும் உள்ளூராட்சி மன்றங்களும் அரசாங்கத்துடன் இணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வெறும் குப்பைகளை அகற்றுவதுடன் மாத்திரமன்றி, நாட்டின் பிரதான பிரச்சினைகளாகக் காணப்படும் கால்வாய்கள் மற்றும் குப்பை முகாமைத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பில்லியன் கணக்கிலான நிதியைப் பயன்படுத்தி, கொழும்பு மத்திய போக்குவரத்து மத்திய உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இத்திட்டத்தின் பலனைப் பொதுமக்கள் நேரடியாக அனுபவித்து வருகின்றனர் என்றார்.