நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலாம் பாடசாலை தவணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதுவரையில் பாடசாலைகளைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் வாரத்தின் புதன்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஏனைய நான்கு நாட்களும் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்.
கடந்த காலங்களில் நிலவிய நிச்சயமற்ற தன்மையால் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எனவே, மாணவர்களின் கல்வியைக் கருத்திற்கொண்டு வாரத்திற்கு 4 நாட்கள் பாடசாலைகளைத் தடையின்றி நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக, மாற்று வழிமுறைகள் மூலம் நிலைமையைக் கையாள அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.