நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதன் மூலம் ஏதேனும் அடக்குமுறைகள் இடம்பெற்றிருந்தால் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறு பிரதமர்ஹரிணி அமரசூரிய எதிர்க்கட்சியினருக்குச் சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் நேற்று( 06.03.2026 ) முற்பகல் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடிய வேளையில், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
அடக்குமுறை, அடக்குமுறை என்று வெறும் வார்த்தைகளை மட்டும் கூறிக்கொண்டிருக்காமல், உண்மையில் எங்கே அடக்குமுறை நடந்தது என்பதை எங்களிடம் முன்வையுங்கள்.
கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் இந்தச் சட்டத்தின் கீழ் யாராவது கைது செய்யப்பட்டார்களா? அல்லது யாராவது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்களா? அத்தகைய சம்பவங்கள் இருந்தால் அவற்றை விவரியுங்கள்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய நாம் எதிர்க்கட்சியில் இருந்தபோது அவசரகாலச் சட்டத்தை எதிர்த்தோம்.
ஆனால், அந்தச் சந்தர்ப்பங்களில் அச்சட்டத்தின் மூலம் அடக்குமுறைகள் திட்டவட்டமாக அரங்கேற்றப்பட்டன அதற்கான சாட்சிகளும் உதாரணங்களும் எங்களிடம் இருந்தன.
அதன் அடிப்படையிலேயே நாம் அன்று எதிர்த்தோம். அவசரகாலச் சட்ட நீடிப்பானது ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் சவால் என எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை.
அரசு சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவே நடவடிக்கை எடுத்து வருகின்றது ஆதாரங்களின்றி அரசியல் இலாபத்துக்காக அடக்குமுறை எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.