நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகளை நினைவுகூரும் 162ஆவது பொலிஸ் நினைவு தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) காலை கொழும்பில் நடைபெற்றது.
பம்பலப்பிட்டி பொலிஸ் களத் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கடமையின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் மரியாதையுடன் கௌரவம் அளிக்கப்பட்டது.
மக்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இதுவரை 5,789 பொலிஸ் அதிகாரிகள் உயிர்நீத்துள்ளனர். இதில் கடந்த மூன்று தசாப்த கால பயங்கரவாத யுத்தத்தின் போது மாத்திரம் 2,598 அதிகாரிகள் வீரமரணமடைந்துள்ளனர்.
அதேநேரம், யுத்த காலப்பகுதியில் மற்றும் கடமையின் போது காயமடைந்து ஊனமுற்ற நிலையில் 2,575 அதிகாரிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வின் போது பொலிஸ் மா அதிபரால் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களும் தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த உள்ளிட்ட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.