வலுசக்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. 12 உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் புதுமையான மற்றும் தொலைநோக்கு அணுகுமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்துவதன் முக்கியத்துவத்துவத்தை கருத்திற்கொண்டு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வலுசக்தி பொருளாதாரம் ஒரு முன்னுரிமைத் துறையாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், முக்கிய பொருளாதாரத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பில் உள்ள பலவீனங்கள் காரணமாக அத்துறையில் முதலீட்டில் பின்தங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்..
நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி கட்டமைப்பின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, தேசியக் கொள்கைகள், திட்டமிடல்கள் மற்றும் செயல் கட்டமைப்புகளுக்கு இணக்கமான முறையில் ஆற்றல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பைத் தயாரிப்பதற்காக, ஹன்ஸ் விஜேசூரிய தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் துமிந்த ஹுலங்கமுவ, பொறியாளர். உபுல் அபேசிறிவர்தன, டி.ஜே. ராஜகருண, விஜேந்திர பண்டார, பொறியாளர் புபுது நிரோஷன் ஹடிகல்ல, செயலாளர் நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர்,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோர் குழுவின் இணை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.