மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இடம்பெற்று வரும் மோதலுக்கு மத்தியில், ஈரானின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால் பிராந்தியத்தில் எந்தவொரு எரிசக்தி கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் எச்சரித்துள்ளார்.
இன்று (29.09.2026) கருத்து தெரிவித்த அவர், ஈரான் எரிபொருளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், பிராந்தியத்தில் வேறு எந்த நாடும் எரிபொருளை விற்பனை செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஹார்மூஸ் நீரிணை மற்றும் கப்பல் போக்குவரத்து தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்த கருத்துகள் குறித்து விமர்சித்த காலிப், அமெரிக்காவின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்மூஸ் நீரிணை
அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஈரானின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத பட்சத்தில் பிராந்தியத்தின் எந்தவொரு கட்டமைப்புக்கும் பாதுகாப்பு இருக்காது என எச்சரித்துள்ளார்.
இதனிடையே, ஹார்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஈரான் முன்மொழிவொன்றை முன்வைத்திருந்த நிலையில், அந்த முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
ஹார்மூஸ் நீரிணை உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் முக்கியமான கடல்வழியாக இருப்பதால், அங்கு ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் கப்பல் போக்குவரத்து தடைகள் சர்வதேச எரிபொருள் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.