பிரித்தானிய குத்துச்சண்டை வீரரான சாக் மில்லர் (Zak Miller), தனது போட்டியின் போது தலையில் ஏற்பட்ட பயங்கரமான காயம் காரணமாக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது நலம் பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேன்செஸ்டரின் (Manchester) ‘AO’ அரங்கில் சனிக்கிழமை இரவில் நடைபெற்ற பிரித்தானிய இறகுப்பளு (Featherweight) சம்பியன் பட்டத்திற்கான மோதலின் போது, குல்லி பவாருக்கு (Gully Powar) எதிராகப் போட்டியிட்ட 29 வயதான சாக் மில்லரின் தலையில் பாரிய வீக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இருவரும் சுமார் பத்துச் சுற்றுகள் வரை விறுவிறுப்பானதொரு போட்டியை வெளிப்படுத்தினர். பவார் தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுக்க, மில்லர் மிகச்சிறந்த முறையில் பதிலடி கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தனர்.
ஐந்தாவது சுற்றில் பவாரின் இடது கை குத்துத் தாக்குதலுக்கு முகங்கொடுத்த மில்லர், தமது சொந்த ஊரிலிருந்து வந்திருந்த ரசிகர்களின் ஆதரவோடு தொடர்ந்து போராடினார். எவ்வாறாயினும், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தலைகளுக்கிடையேயான மோதலால் மில்லரின் தலையில் பயங்கரமான இரத்தக்கட்டி (Hematoma) உருவாகியதுடன், போட்டி நீடிக்க நீடிக்க அந்த வீக்கம் மேலும் அதிகரித்தது. பிரித்தானிய குத்துச்சண்டை வரலாற்றில் இதற்கு முன்னர் காணாத அளவுக்கு மிகவும் விநோதமான மற்றும் திகிலூட்டும் காயங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஒன்பதாவது சுற்றில் வளையத்திற்கு அருகில் இருந்த வைத்தியர் அப் பயங்கரமான வீக்கத்தைப் பரிசோதித்ததுடன், பத்தாவது சுற்றின் தொடக்கத்தில் போட்டி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது. வில்கி ஹட்சின்சன் (Willy Hutchinson), ஜோசுவா புவாட்சியை (Joshua Buatsi) வீழ்த்தி வெற்றி பெற்ற காலி WBC உலக லைட்-ஹெவிவெயிட் பட்டப் போட்டியில், ஒருமனதான தொழில்நுட்பத் தீர்ப்பு மூலம் குல்லி பவார் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றிடமாகவிருந்த பிரித்தானியப் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இக்காயத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த முன்னாள் உலகச் சம்பியனான கார்ல் ஃபிராம்டன் (Carl Frampton), “இதுவரை நான் கண்டவற்றில் இதுவே மிக மோசமான காயமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மில்லரின் முகாமையாளரான கெவின் மாரி (Kevin Maree) தற்போது ஒரு மகிழ்ச்சியான சுகாதாரத் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தமது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“கடந்த இரவில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து சாக் மில்லர் தற்போது நலம் பெற்று வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்பாராத விதமாகத் தலைகள் மோதிக்கொண்டமையினாலேயே அவரது தலையின் மேற்பகுதியில் பாரிய வீக்கம் ஏற்பட்டது. நிகழ்விடத்திலிருந்த மருத்துவக் குழுவினரால் சாக் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னர், மேலதிக பரிசோதனைகளுக்காக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.”
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவர், முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, அவரது தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் திருப்தி வெளியிட்டுள்ளனர். அவர் மிக விரைவில் தனது வழக்கமான பொலிவான தோற்றத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
தனது குத்துச்சண்டை வீரரைப் பாராட்டிய மாரி மேலும் குறிப்பிடுகையில், “சாக் உண்மையிலேயே மிகவும் சிறப்பானதொரு மனிதர். கடந்த இரவில் அவரைப் பற்றி விசாரிப்பதற்கும் அவரது நலம் விசாரிப்பதற்கும் திரண்ட நல்உள்ளங்களின் எண்ணிக்கையே அவர் பலருக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது” எனவும் தெரிவித்தார்.