நுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்கு பல்லேகம ஹேமரத்ன தேரரின் சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக விவகாரம் மற்றும் அந்தச் சம்பவத்தின் போது அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், அரசாங்கத்தின் பெண் பாராளுமன்ற அமைச்சர்களும் கடைப்பிடிக்கும் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என ஜனபலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் கீதிகா தர்மசிங்ஹ கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.
ஜனபலய அமைப்பினால் பொரளை என்.எம். பெரேரா கேந்திர மத்திய நிலையத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் அவர் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்கு பல்லேகம ஹேமரத்ன தேரர் சம்பந்தப்பட்ட 14 வயது சிறுமி துஷ்பிரயோக விவகாரத்தில், அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆரம்பம் முதலே காட்டிய மெத்தனப்போக்கும், மௌனமும் அப்பட்டமான அநீதியாகும். குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் குறித்து மேடைகளில் முழங்கும் அரசாங்கத்தின் பெண் பாராளுமன்ற அமைச்சர்கள், இத்தகையதொரு பாரிய அநீதி இடம்பெற்றபோது இதுவரை வாய் திறக்காமல் இருப்பது அவர்களின் கபட நாடகத்தையே வெளிப்படுத்துகிறது.
ஒரு சிறுமி பாதிக்கப்பட்டிருக்கும் போது, அந்தச் சிறுமியின் தரப்பு நியாயங்களைக் கேட்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஆனால், இந்தச் சம்பவத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம், சட்டத்தின் ஆட்சியை விடவும் மதத் தலைவர்களின் ஆதிக்கமே இந்த நாட்டில் மேலோங்கி இருப்பதைக் காட்டுகிறது.
சந்தேக நபரான தேரர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக வைத்தியசாலையில் தங்கியிருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவருக்கு பிணை வழங்கப்பட்ட விதம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் கோபம் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் திலுத் அமுனுகம முன்வைத்த கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. ஒரு சிறுமியைப் பாதுகாத்து அவருக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டிய சமூகப் பொறுப்புள்ள நபர்கள், இவ்வாறான பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவது சமூகத்தின் வீழ்ச்சியைத் தான் காட்டுகிறது. வைத்தியப் பரிசோதனைகளின் போது, அந்தச் சிறுமி தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டது குறித்த முழுமையான உண்மைகளைக் கூறியிருந்தும், சட்ட நடைமுறைகள் மெதுவாகச் சென்றது ஏன்? பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி, இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரங்களில் பொய்யான தகவல்களைக் கூற வேண்டிய அவசியம் கிடையாது.
அதேபோல், நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்காக ஆஜரான சட்டத்தரணி ஒருவர், பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் இழிவானவை. ‘அநுராதபுரத்தில் சிறுமிகள் துஷ்பிரயோக சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இது ஒன்றும் புதிய விடயமல்ல’ என்று அவர் கூறியது, இந்தச் சமூகத்தின் விழுமியங்கள் எந்தளவுக்குச் சரிந்து போயுள்ளன என்பதை நமக்கு உணர்த்துகிறது. இத்தகைய சட்டத்தரணிகள் சட்டத்தின் புனிதத்தன்மையையும், பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தையும் மதிக்கத் தவறியுள்ளனர். இது சாதாரணமான ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, பௌத்த மதத்தின் பெயரால் கறை படிந்த ஒரு செயலாகும்.
ஆட்சியாளர்கள் தங்களை மதத் தலைவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்திக்கொண்டு, சமூக விரோதச் செயற்பாடுகளை வேடிக்கை பார்ப்பது இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தும். பிக்குவாக இருந்தாலும், சாதாரண பிரஜையாக இருந்தாலும், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் மூலம் உண்மை தெளிவாகியுள்ள நிலையில், இனியும் காலம் கடத்தாமல் குற்றவாளிக்கு எதிராகச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.