ரீல்ஸ்கள் – மீம்ஸ்கள் என சமூக ஊடக வலைதளங்களை.. பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பாவிக்கும் டிஜிட்டல் தள ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை துல்லியமாக அவதானித்து… இரண்டு நிமிடங்கள் மட்டுமே நீடிக்கக்கூடிய ‘குட்டி சீரிஸ்’ எனும் தலைப்பிலான வெர்ட்டிகல் மைக்ரோ டிராமா ஜேனரிலான படைப்புகளுக்கு என தமிழில் கதை ஷார்ட்ஸ் டிஜிட்டல் தளம் அறிமுகமாகி இருக்கிறது.
இந்த தளத்தை பார்வையிட இந்திய மதிப்பில் 20 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டணத்தை செலுத்தி, நூற்றிற்கும் மேற்பட்ட தமிழில் அசலாக தயாரிக்கப்பட்ட வெர்டிகல் மைக்ரோ டிராமா எனும் ஜேனரில் வெளியாகி கொண்டாடப்பட்டு வரும் இரண்டு நிமிட கதை சார்ந்த படைப்புகளை பார்வையிடலாம்.
புதிய இளம் தலைமுறையினர் எப்பொழுதும் இலத்திரனியல் சாதனமான கைபேசியுடன் தான் உலா வருகிறார்கள். தங்களது காத்திருக்கும் தருணத்தையும் கைப்பேசியுடன் தான் கடத்துகிறார்கள். இத்தகைய தருணங்களில் அவர்கள் இரண்டு நிமிட கால அளவு கொண்ட சர்வதேச தரத்திலான ‘குட்டி சீரிஸ்’ எனும் டிஜிட்டல் தொடர்களையும் பார்வையிடுவதுண்டு. இதனை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் எளிதாக பாவிக்கும் வகையில் கதை ஷார்ட்ஸ் அறிமுகமாகி இருக்கிறது.
இது தொடர்பாக இதன் நிறுவனர் கரண் தயாநிதி மாறன் பேசுகையில், ” டிஜிட்டல் தள பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து மாற்றம் அடைந்து வருவதால்… அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்த தளத்தை அறிமுகப்படுத்துகிறோம். இந்த துறைக்கான அடுத்த தலைமுறை சார்ந்த திறமைசாலிகளை உருவாக்கும் நோக்கில் கதை ஷார்ட்ஸ் – ‘கதை கிளப்’ எனும் புதிய விடயத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் தளத்தில் பன்னிரண்டாயிரம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். மேலும் இந்த டிஜிட்டல் தளத்தின் மூலமாக எழுத்தாளர்கள்-
நடிகர்கள் -இயக்குநர்கள்- படத்தொகுப்பாளர்கள்- ஒளிப்பதிவாளர்கள்- படைப்பாளிகள் – ஆகியோர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் இத்துறையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளையும் உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம் ” என்றார் .