ஈரானின் மறைந்த முன்னாள் உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அலி காமேனியின் இறுதிச்சடங்கு நடைமுறைகள் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வடகிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஹாதில் நடைபெறவுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் தெஹ்ரான் நகரில் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் அலி காமேனி கொல்லப்பட்டார்.
அதனையடுத்து, அமெரிக்க இராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளில் ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தியது.
இந்த இரு தரப்பு தாக்குதல்களில் பல அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் உயிரிழந்ததோடு, பெருமளவினர் காயமடைந்தனர். ஈரானில் பல இடங்களில் பலத்த பொருட்சேதங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில், தற்போது அங்கு தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அலி காமேனியின் இறுதிச்சடங்குகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இறுதிச்சடங்கு நிகழ்வுகளின் ஓர் அம்சமாக, ஜூலை 7ஆம் திகதி தெஹ்ரானின் தெற்கே அமைந்துள்ள மற்றொரு புனித நகரமான கோமிலும் காமேனிக்கான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என்றும் ஈரான் அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.