”மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ..! அவர்கள் தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள்தான் மிகவும் சந்தோஷமானவர்கள். இதை சொல்ல வரும் சினிமா தான் கார் மேனி செல்வம்” என அப்படத்தின் நாயகனான சமுத்திரக்கனி தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா சந்திர மௌலி, கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா , அர்ஜுனன், கோதண்டம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது. ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு அதிதியாக படக்குழுவினருடன் பங்கு பற்றினார்.
இந்நிகழ்வில் சமுத்திரக்கனி பேசுகையில், ” பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் என்பவன் எப்போதும் பிரச்சனைகளுடன் இருப்பவன். செல்வந்தர் என்பவன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் ஒருவர் வாழ்கிறாரோ.. அவர்தான் மிகப்பெரிய செல்வந்தர். அவர்தான் மிகவும் மகிழ்ச்சியானவர். அதை சொல்ல வருவது தான் இந்தப் படம். உங்களையும் செல்வந்தராக்கும் நிறைய விடயங்களை இயக்குநர் விவரித்திருக்கிறார்” என்றார்.
இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் – விளிம்பு நிலையில் அதிலும் குறிப்பாக பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில் வாழும் ஒரு தம்பதியினரின் வாழ்வியல் அணுக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால்… படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.