செம்மணி புதைகுழி விவகாரத்தில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான பாதீட்டிற்கு (Budget) நீதி அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்ற அதிரடித் தகவல் இன்று (2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். நீதவான் நீதிமன்றில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் இந்த முக்கிய விடயத்தை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
முன்னதாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 20-ஆம் திகதி ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை என்பதால், ஏப்ரல் 27-ஆம் திகதி ஆரம்பிப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அகழ்வுப் பணிகளுக்கான செலவீன பாதீட்டிற்கு (Budget Estimate) நீதி அமைச்சு இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை என்பதைச் சட்ட வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார். நிதி அனுமதி கிடைக்காமல் பணிகளைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாதீடு தொடர்பான இறுதி முடிவு மற்றும் 27-ஆம் திகதி அகழ்வை ஆரம்பிக்க முடியுமா என்பது குறித்துத் தீர்மானிக்க, வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் திகதிக்கு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
அகழ்வுப் பகுதியில் தேங்கியிருந்த வெள்ளநீர் தற்போது முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. நிலத்தில் சிறிதளவு ஈரலிப்புத் தன்மை மட்டுமே காணப்படுவதால், ஏப்ரல் 20-ஆம் திகதிக்கு முன்னதாக அகழ்வுப் பணிக்கு ஏற்ற உலர்ந்த காலநிலை நிலவும் என எதிர்பார்ப்பதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.