சென்னை
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முழுமையாக நிறுத்துவதாகவும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஓடிடி ரிலீசுக்கு 8 வாரக் கட்டுப்பாடு:
புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் (56 நாட்கள்) பிறகுதான் ஓடிடியில் (OTT) வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர்கள் எழுத்துப்பூர்வமாகக் கடிதம் கொடுத்தால் மட்டுமே, அந்தப் படங்களைத் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது.
தன்னிச்சையான முடிவால் அதிருப்தி:
ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மாநிலங்களில் இல்லாத இந்த நடைமுறையை, தமிழ்நாட்டில் மட்டும் தயாரிப்பாளர்களைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகப் புகுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆண்டுக்கு ரூ.700 கோடி இழப்பு:
ஆண்டுதோறும் சுமார் 250 திரைப்படங்கள் வெளியாகும் நிலையில், பெரும்பாலான திரைப்படங்கள் போட்ட முதலீட்டில் பாதியைக் கூட எடுக்க முடியாமல், ஒவ்வொரு வருடமும் ரூ.700 கோடிக்கு மேல் பெரும் பொருளாதார இழப்பைத் தயாரிப்பாளர்கள் சந்தித்து வருவதாக அந்த அறிக்கையில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்.1 முதல் வேலைநிறுத்தம்:
பெரும் இழப்பிற்கு இடையிலும் தொழில் செய்து வரும் தயாரிப்பாளர்களைக் கலந்து பேசாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவைக் கண்டித்து, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை எனவும், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நிறுத்துவது எனவும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து கூட்டாக முடிவெடுத்துள்ளன.
முதலமைச்சரிடம் முறையீடு:
மேலும், ஒட்டுமொத்தத் திரையுலகையும் பாதிக்கும் இந்தப் பிரச்சனை குறித்துத் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அரசு மூலமாக நிரந்தரத் தீர்வு காண உள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
#TamilCinema #TFPC #KollywoodStrike #OTTRelease #TheaterOwners #TamilMovies #KollywoodNews #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates