அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே நடத்தப்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கவலை வெளியிட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு இணங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சல்லே, இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்பைப் பெற தகுதியுடையவர் என்று ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
விசாரிக்கப்படும் குற்றச்சாட்டுகளை விட, கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் நடத்தப்படும் விதம் குறித்தே கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது அரசியலமைப்பின் 11வது உறுப்புரை மற்றும் சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கு முரணானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது அவமதிப்பான முறையில் நடத்தப்படுவதற்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) விதிகளையும் ஐக்கிய தேசியக் கட்சி இங்கு மேற்கோள் காட்டியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் சர்வதேச ரீதியில் அவதானத்தை ஈர்த்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, சல்லேயின் உடல்நிலையை பரிசோதிக்க நாடாளுமன்றக் குழுவொன்றுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அரசியலமைப்புப் பாதுகாப்புகள் சிதைக்கப்படுவது பரந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, இந்த வழக்கு தொடர்பான முன்னேற்றங்களை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்பதாகத் தெரிவித்துள்ளது.