சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை தனது இறையாண்மையையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்காக சமநிலை, நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஈரானியக் கப்பல் மற்றும் அமெரிக்க விமான விவகாரத்தில் ஜனாதிபதியின் தீர்மானத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் பின்னணியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ‘ஈரான் கப்பல் விவகாரத்தில் மூன்று கப்பல்கள் நாட்டுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்வதற்கு கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதுகுறித்து நாங்கள் ஆராய்ந்துவந்த நிலையில், அன்றைய தினம் மாலை ஐக்கிய அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் மத்தள விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரப்பட்டது. போர் மூழும் சூழல் நிலவியதால், நாம் இரண்டு தரப்பினரின் கோரிக்கைக்கும் அனுமதி வழங்காமல் நடுநிலையாக செயற்பட்டோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
உலகளாவிய ரீதியில் போர் பதற்றம் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி வெளியிட்ட இந்தத் தகவல் சர்வதேச மட்டத்தில் விசேட கவனம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் ஈரானிய கப்பல்கள் மற்றும் அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி அளிக்காமல் நடுநிலையாகச் செயற்படுவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தைப் பாராட்டி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
சரியாகத் திட்டமிடப்பட்ட தீர்மானங்களே ஒரு நாட்டின் நம்பகத்தன்மையை வரையறுப்பதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், ‘சிக்கலான பூகோள அரசியல் சூழ்நிலையில் இலங்கை தனது இறையாண்மையையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்காக சமநிலை, நிதானம் மற்றும் தெளிவுடன் செயற்பட்டிருக்கிறது’ எனப் பாராட்டு வெளியிட்டுள்ளார்.
அதேபோன்று கொள்கை அடிப்படையிலான தொடர்ச்சித்தன்மை நம்பிக்கையை உருவாக்குவதாகவும், அமைதியுடன்கூடிய வலிமை அதனைத் தக்கவைப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அலி சப்ரி, எமது நாடு குறித்துப் பெருமிதம் கொள்வதாகவும், ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.