திருப்பூர்:
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் கூட்டணியில் உருவாகி வரும் ‘சண்டியர்’ திரைப்படத்தின் தலைப்புக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியினர் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிரடியாகப் புகார் அளித்துள்ளனர்.
பழைய சர்ச்சை:
கமல்ஹாசனின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் 237-வது புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. காரின் கதவோரம் கையில் துப்பாக்கியுடன் கமல்ஹாசன் ஆக்ரோஷமாக நிற்கும் இந்தப் போஸ்டர் வெளியான உடனே, பழைய டைட்டில் சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டில் கமல்ஹாசன் இயக்கி, நடித்த திரைப்படமான ‘விருமாண்டி’ படத்திற்கு முதலில் ‘சண்டியர்’ என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் புதிய தமிழகம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதா கமல்ஹாசனை அழைத்துப் படத்தின் பெயரை மாற்ற உத்தரவிட்டார். இதனால் பெயர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரைத் தனது புதிய படத்திற்குக் கமல் மீண்டும் சூட்டியுள்ளார்.
போலீசில் புகார்:
இந்த நிலையில், கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிப் புதிய தமிழகம் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் ம.தமிழ்மணி திருப்பூர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “சண்டியர் படத்திற்காக வெளியிடப்பட்ட சுவரொட்டியில், ‘பழிக்குப் பழி ரத்தத்தால் மட்டுமே தீர்க்கப்படும்’ என்ற வன்முறையைத் தூண்டும் வாசகம் இடம்பெற்றுள்ளது. இது அரசின் சட்டதிட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல், பொதுவெளியில் வன்முறைக்கு வித்திடும் செயலாகும். 1993-ஆம் ஆண்டு வெளியான ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் சார்ந்த பிரச்சனையால், தென் தமிழகத்தில் பெரும் சாதிய மோதல்கள் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன,” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூகப் பதற்றம்:
மேலும், “தொடர்ந்து இதுபோன்ற சாதிய வன்முறைகள் நடந்து வரும் நிலையில், கமல்ஹாசன் தனது படங்களின் மூலம் மீண்டும் சாதிய வெறுப்பைத் தூண்டி, சமூகத்தில் வன்முறையை உருவாக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ‘சண்டியர்’ என்ற பெயர் முரட்டுத்தனமான வர்க்கத்தையும், சட்ட அமைப்புகளுக்குக் கட்டுப்படாதவன் என்ற பொருளையும் கொண்டது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, வன்முறையைத் தூண்டும் இத்தகைய படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் அருண்குமார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,” என்று ஆணித்தரமாகக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், காவல்துறை இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.